உலகில் மனிதர்கள் தாங்கள் நினைக்கும் காரியங்கள் நினைத்தபடி நிறைவேற வேண்டுமானால் அதற்கு ஏற்ற ஆற்றலும் மனத்திண்மையும் அவர்களுக்கு தேவைப்படுகிறது.மனத்திண்மை பெற மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி செய்ய வேண்டும்.அதுவே த்யானம்.த்யானத்தில் மனதை ஒருமுகப்படுத்தி,இடைவிடாது பயிற்சி செய்து தவ நிலையை எய்தி,பல அற்புத ஆற்றல்களாகிய சித்திகள் உடைய தவ வலிமை கொண்ட முனிவர்களை சித்தர்கள் என்று கூறுவார்கள்.அணிமா,மகிமா,லகிமா,கரிமா,ப்ராப்தி,ப்ராகாம்யம் ஈசித்வம்,வசித்வம் என்னும் அஷ்ட மஹா சித்திகளை உடையவர்கள் சித்தர்கள்.
மகாசித்தி என்ற நாமம் உடைய அம்பிகையே இந்த சித்திகளாகத் திகழ்ந்து,அவற்றை சித்தர்களுக்கு அருளிச்செய்பவள்.எனவே அபிராம பட்டர்,”சித்தியும் சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பராசக்தியும்”என்று பாடிப்புகழ்ந்தார்.சித்தேசுவரி,சித்தமாதா என்ற நாமங்களும் அதனாலேதான் அம்பிகைக்கு உருவாகின.
சக்தி தழைக்கும் சிவமும்
சக்தியும் சிவமும் எப்பொழுதும் இணைந்து ஒன்றாயிருப்பர்.அதனாலேயே இவ்வுலகம் இயங்குகின்றது. சக்தி இல்லையேல் சிவம் இல்லை.சக்தியும் சிவமும் அபேதமானவர்கள் என்பதை இன்றைய விஞ்ஞானம் வாயிலாகவும் அறியலாம்.இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பொருளும் ஆற்றலும் ஒன்றே என்று அறிவியல் வாயிலாகக் கண்டறிந்துள்ளது சிவமும் சக்தியும் இணைந்து தொழில்புரிவதனாலேயே இவ்வுலகம் இயங்குகிறது என்பதற்கான அறிவியல் சான்றாகத் திகழ்கிறது.எம்பெருமாட்டியின் நாமங்களில் ஒன்று சிவமூர்த்தி என்பது.அதாவது அன்னையே சிவ சொரூபமாய் விளங்குகிறாள் என்று பொருள் படும்.எனவே அபிராம பட்டர்”சக்தி தழைக்கும் சிவமும்” என்று பாடினார்.
தவம் முயல்வார் முக்தியும் முக்திக்கு வித்தும்
மனிதர்கள் இறைவியை வழிபடுவதற்கு பல காரணங்கள் உண்டு.சிலர் தங்களுடைய அல்லல்கள் தீர வேண்டும் என்று ப்ரார்த்திப்பார்கள்.சிலர் தாங்கள் செய்யும் செயல்கள் தொய்வின்றி நல்லபடியாக நிறைவேற வேண்டி வழிபடுவார்கள்.தங்களுடைய உலகியல் வாழ்வில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வழிபாடுகள் அவை.
உண்மையான பக்தர்,இத்தகைய ஆசைகளிலிருந்து விடுபட்டு,இறைவியை அடைய வேண்டித் தவம் செய்வார்.அத்தவத்தினால் அவர் அடையும் ஆனந்தமயமான நிலையே முக்தி எனப்படும்.முக்தி சொரூபமாய் இருப்பவள் அம்பிகை.நம்முடைய அவித்தையை போக்கி,பிறவிப்பிடிகளிலிருந்து நம்மை விடுவித்து,ஞானத்தை அளித்து,நாம் முக்திபெறுவதற்கு வித்தாக இருக்கிறாள் அன்னை பராசக்தி.
எனவேதான்,அபிராம பட்டர்,”தவம் முயல்வார் முக்தியும் முக்திக்கு வித்தும்” என்று பாடுகிறார்.
முக்திக்கு வித்தும் வித்தாகி முளைத்து எழுந்த புத்தியும் அம்பிகையே
நம்முடைய அறிவினுள் நின்று ஞானத்தை ஒளிர் விடச்செய்பவள் அம்பிகை.அறிவு ஒளிர்வது அதனுள்ளே அன்னை இருந்து அறிவிப்பதனால்தான்.இப்படி நமக்கு ஆனந்தத்தை அளிக்கும் அன்னை ஆனந்தவல்லி நம்முடைய புத்தியைக்காத்து,சித்தி முதல் திரிபுரங்கள் வரை எல்லாம் தானாகி நின்று இவ்வுலகை காக்கிறாள்.
அன்னை ஆனந்தவல்லியின் பொற்கமல பாதம் பணிவோம்.
“கனகபுரீஶ்வரி கருணாஸாகரி ஆனந்தவல்லி நமோ நமோ”
(தொடரும்)
Comments