லோக ப்ரஸித்தமான தாமரைப் புஷ்பங்கள், பனிக்காலங்களில் அவைகளில் பனி ஸம்பந்தப்பட்டவுடன் உதிர்ந்துபோன தளங்களோடு கூடினவைகளாகக் காணப்படும். தேவியினுடைய பாத கமலங்களோ ஒரே பனிமயமான ஹிமயமலையில் எப்பொழுதும் ஸஞ்சாரம் செய்யும் ஸ்வபாவமுள்ளவைகளாக இருக்கின்றன.
ஆகிலும், பாதாரவிந்தங்களுக்குக் கொஞ்சமும் விகாஸம் குறையவில்லை. இந்தக் காரணத்தால், லோகப்பிரஸித்தமான தாமரைப் புஷ்பத்தைக் காட்டிலும் தேவியினுடைய சரணாரவிந்தம் மேலான தாமரைப்புஷ்பம் என்பது வெளியாகிறது. அத்துடன், லோகத்தில் பிரஸித்தமான தாமரைப் புஷ்பங்களோ, இரவுகளில் மூடின தளங்களோடு கூடினவைகளாக இருந்துகொண்டு, விடியற்காலையில் ஸூர்யன் உதித்தவுடன் மலர்ந்த தளங்களோடு விகஸிக்கின்றன. தேவியினுடைய சரணாரவிந்தமோ இரவோ, பகலோ, விடியற்காலையோ எப்பொழுதும் விகாஸத்துடன் விளங்குகிறது.
க்ரஹித்துக்கொள்ள வேண்டிய தத்வமோ, தேவியினுடைய சரணாரவிந்த பஜனம் ஸகல புருஷார்த்தத்தையும் கொடுக்கக் கூடியது என்றும், சிவ பூஜைக்குத் தாமரைப் புஷ்பம் முக்யம் என்றும், அவ்விதம் பூஜிக்கின்றவர்கள் லோகத்தையே ஜயித்த மன்மதனையும் ஜயித்தவர்களாக ஆகக்கூடுமானதால் மற்ற ப்ராக்ருத சத்ருக்களை ஜயிக்க அவர்களுக்கு யாதொருவிதமான ச்ரமமும் இராது என்பது மாத்ரமே. இவ்விதம் தேவியினுடைய பெருமையை அறிந்து உபாஸிக்கிறவர்கள் குபேரனுக்கு ஸமானமாக ஆவார்கள்.
Comments