ஓர் சிறப்பு பார்வை
பாரதத்தின் மிகத் தொன்மையான பாரம்பரியமிக்க வழிபாடாகக் கருதப்படும் சாக்த சமயம் எனும் ஆலமரத்திலிருந்து ஒரு விழுதாகத் தோன்றி, தனி மரமாகத் தழைத்த மார்கமாம் ஸ்ரீ வித்யையில், உபாசகர்கள் சித்சக்தியாக விளங்கும் அம்பிகையை உபாசனை செய்வதன் மூலம்,சிவசக்தி ஐக்கியமாகி, பேரின்ப முக்தி நிலை அடைவதையே குறிக்கோளாகக் கொள்கின்றனர். இத்தகைய ஸ்ரீவித்யையில் சிகரமாய் விளங்கும் , மஹா பெரியவா என்று நம் அனைவராலும் ஸ்ரீஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் ஒரு மண்டலம் தங்கி, நம் ஆலயத்தில் அம்பிகையை பூஜை செய்த பெருமையுடைய ஸ்ரீமஹாமேரு ஸ்தலமாம், ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில், தொன்றுதொட்டு அருட்தொண்டு செய்துவரும் பரம்பரையில், சிந்தாமணியாய் தோன்றி, ஸ்ரீவித்யை என்னும் ஞானஸாகரத்தில் மூழ்கி முத்தெடுத்தவரும், ஸ்ரீவித்யையை உபதேசம் செய்து ஞானமார்க்கத்திற்கு வழிகாட்டுபவருமான எங்களின் பரமகுருநாதர் “ஸ்ரீசாக்தசிந்தாமணி”,
”சிவஸ்ரீ. N. ஏகாம்பரநாதகுருஜி”மற்றும் அவ்வண்ணமே அவரைபின்பற்றி தேவி உபாசனையில் சிகரமாய் உயர்ந்து, சாக்த திலகமாய் ஒளிரும் நமதுகுருநாதர் “ஸ்ரீவித்யா ஞானபாஸ்கரா” சிவஸ்ரீ. E. ஹரிஹரசிவகுருஜி”, சாக்த வழிபாட்டை நித்ய அனுஷ்டானமாகச் செய்து, அவர்தம் சிஷ்யர்களுக்கும், தம்மை நாடிவரும் பக்தர்களுக்கும், அவர்தம் துயர் துடைத்து, வாழ்வு மேம்பட வழிசெய்யும் பொருட்டு, ஞானஸ்வரூபிணியாகிய ஸ்ரீவித்யை என்னும் அம்பிகையை உணர பெரும் தொண்டாற்றி வருகிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இப்படி பல பெருமைகளையுடைய ஸ்ரீசக்ரம் மற்றும் ஸ்ரீ மஹாமேருவை, ஸ்ரீ ஆனந்தவல்லியின் ஆக்ஞைப்படி பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ வித்யா மார்க்கத்தை வம்சாவழியாக சிரத்தையுடன் உபாசித்து வரும் நமது குருநாதர்களால், நமது ஆலயத்தில் மிகவும் சிறப்பாக பௌர்ணமி தோறும் நிகழ்த்தப்படுவது,ஸ்ரீ வித்யையிலே மிகவும் உன்னதமானதாகவும், உயர்வானதாகவும் விளங்கும் ஸ்ரீ நவாவரண பூஜை.
இந்த சிறப்புடைய நவாவர்ண பூஜை, நமது ஆலயத்தில் மாதம் தோறும் பௌர்ணமியிலும் மற்றும் உற்சவத்தில் ஸ்ரீ பரசுராம கல்பசூத்திரத்தில் கூறியுள்ளது போல், ஸ்ரீ நவாவர்ண ஹோமம், ஸ்ரீ நவாவர்ண பூஜை, திதிநித்யா பூஜை, கன்யா பூஜை, ஸுவாஸினி பூஜை, நிறைவாக குரு பூஜை ஆகியவற்றுடன் பூஜை நிறைவடையும். ஸ்ரீ நவாவர்ண பூஜையின் போது ஸ்ரீ நவாவர்ண கீர்த்தனைகளும், நாம் சங்கீர்த்தனமும் ஏக காலத்தில் நடைபெறுவது மிகவும் சிறப்பான அம்ஸமாகும்.
ஸ்ரீ நவாவர்ண பூஜை :: விசேஷ பலன்கள் ::
இத்தகைய விசேஷமுடைய ஸ்ரீ நவாவர்ண பூஜையை தரிசனம் செய்வதால் கிட்டும் பலன்கள் என்னவென்றால்,
· ஸுவாஸீனி சாபம்,பிதுர் சாபம், ப்ரும்மஹத்தி தோஷம், ஜாதகத்தினால் ஏற்படும் தோஷம் அனைத்தும் நிவர்த்தி அடைதல்
· கல்வி, வித்யை மேம்படுதல்
· சிறந்த உத்தியோகம் அமைதல்
· நல்ல இல்லற வாழ்க்கை
· நற்குழந்தைப் பேறு
· அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுதல்
· வியாபார விருத்தி
· ராஜாங்க பதவி அந்தஸ்து
· ஸகல வியாதி நிவர்த்தி
· வேண்டுவன அனைத்தும் பெறுதல்
· ஆனந்தமான வசதியான அமைதியான வாழ்க்கை
குபேரனுக்கு நிகரான செல்வங்களை நிறைக்கும் நவ நிதிகளையும் தரவல்லது ஸ்ரீ நவ ஆவரண பூஜை.
வருடத்தின் முதல் மாதமான சித்திரையிலே வரும் மிகவும் விசேஷமானதாக கருதப்படும் இந்த சித்ரா பௌர்ணமி நன்நாளில், நமது ஆலயத்தில் நமது குருநாதர் மிகவும் பக்தி சிரத்தையுடன் நிகழ்த்திய நவாவர்ண பூஜையில் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு அம்பிகையின் எல்லையில்லா பேர் அருளைப் பெற்றார்கள் என்பது அனுபவப் பூர்வமான உண்மை.
Comments