பக்தி மூன்று வகைப்படும். ஈஸ்வரனுக்கு நேராக செய்யும் பக்தி “ஈஸ்வர பக்தி”, அடியார்களுக்கு செய்யும் பக்தி “அடியார் பக்தி”, ஆச்சாரியாரிடம் செய்யும் பக்தி “குருபக்தி”. இந்த மூன்றிலே மிகவும் சிறந்தது குருபக்தி என்று கூறப்படுகிறது .
“என்ன காரணம்?” என்று பார்ப்போம்.
இறைவன் கருணையோடு நீக்கமற நிறைந்து இருக்கிறார். இந்த இடத்தில்தான் இறைவனுடைய கருணை இருக்கிறது. இவ்விடத்தில் இறைவனுடைய கருணை இல்லை என்று சொல்ல முடியாதபடி, எங்கும் பரந்தும் விரிந்தும் இருக்கிறார். அந்த கருணையைப் பெற வேண்டுமென்றால் ஆச்சாரியார் மூலமாகத்தான் சுலபமாக பெற முடியும்.
ஒரு சிறிய உதாரணம் பார்ப்போம்.
120 டிகிரி வெயில், கடும் வெயில் அங்கு ஒரு வேஷ்டியை வைத்தால் சுடுமே தவிர எரிந்து போகாது. சூரியகாந்தக் கண்ணாடி என்று ஒன்று உண்டு. அந்த சூரியகாந்தக் கண்ணாடியை வெய்யிலில் வைத்து அதன் கீழ் வருகிற மற்றொரு வெயிலில் வேஷ்டியை வைத்தால் “தீ” திக்கென்று அடித்துக் கொள்ளும். வெயிலுக்கு வேஷ்டியை எரிக்கின்ற ஆற்றல் கிடையாது. ஆனால், சூரியகாந்த கண்ணாடிக்குப் கீழ் வரும் வெயில் வேஷ்டியை தகனம் பண்ணி விடுகிறது.
என்ன காரணம்? ஐம்பதாயிரம் கிரணங்களை தன்பால் ஈர்த்து அனுப்புகிறது சூரிய காந்த கண்ணாடி. நேராக வரும் வெயில் மாதிரி இறைவனைக் குறித்து செய்யும் பக்தி. சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வருகின்ற வெயில் மாதிரி குருபக்தி. குருநாதர் பல வருடங்கள் தவம் செய்து அந்த திருவருளை சேர்த்து வைத்திருக்கிறார். அதனை தன் சீடனுக்கு தருகிறார். ஆகையால் தான் எல்லா பக்தியைக் காட்டிலும் குரு பக்தியே சிறந்தது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
அருணகிரிநாதர் மிகவும் பெரியவர். அவர் ஐம்பத்தொரு அனுபூதி பாடல்களை பாடினார். மந்திர சாத்திரமாக 51 அக்ஷரங்களும் ஐம்பத்தொரு அனுபூதி பாடல்களைப் பாடினார். அதில் கடைசி பாட்டு நம் அனைவருக்கும் தெரிந்ததே!!
“குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”
என்று கூறுகிறார். ஆண்டவனை “குருவாக வந்து அருள் செய்”, என்று கூறுகிறார்.
மாணிக்கவாசகருக்கு எம்பெருமான் குருநாதராக வந்தார். குருந்த மரநிழலில் - திருப்பெருந்துறையில். ஆகவே, இறைவன் பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு குருநாதனாக வருவார்.
Bình luận